×

குரு பெயர்ச்சியை எதிர்கொள்வது எப்படி?

வருடம் ஒருமுறை நடைபெறும் குரு பெயர்ச்சி இந்த ஆண்டு திருக்கணிதப்படி 22.4.2023 அன்று நடைபெறுகிறது. வாக்கிய பஞ்சாங்கத்துப்படி, இரவு 11:26-க்கு மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், மேஷ ராசி அசுவினி நட்சத்திர முதல் பாதத்தில் நுழைகிறார். இந்த குரு பெயர்ச்சி குறித்து பல ஜோதிட நிபுணர்கள், ராசி பலன்களை எழுதி இருக்கிறார்கள். இப்பொழுதுதான் சனியும் மாறினார். அடுத்த சில மாதங்களில் ராகு பெயர்ச்சியும் நடக்க இருக்கின்றது. இந்த பெயர்ச்சிகள் குறித்து தனித்தனியாகப் பலாபலன்களை நாம் காண முடியாது.

எது பலனை தீர்மானிக்கிறது?

நம் வாழ்வின் ஒவ்வொரு பலன்களையும் நம்முடைய சொந்த ஜாதகம்தான் தீர்மானிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். அதைத்தான் பிராப்தம் என்பார்கள். அந்தப் பலன்கள் எப்பொழுது நடைபெறும் என்பதை தீர்மானிப்பது தசாபுத்தி அந்தரம். கோச்சாரம்தான் (கோள் சாரம்) இதிலே இறுதிக் கையெழுத்து போட வேண்டியது.

அதனால், கோச்சாரத்துக்கு நாம் முக்கியத்துவம் தருகின்றோம். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என்று சொன்னாலும், அல்லது ஒரு மகத்தான தீமையை சந்திக்க வேண்டும் என்று சொன்னாலும், அதற்கு அன்றைய அந்த நிமிடத்தில், அந்த வினாடிக்கான சூழ்நிலை அனுமதிக்க வேண்டும். அது என்ன, ‘‘தீமையில்கூட மகத்தான தீமை என்று ஒன்று இருக்கிறதா?” என்று கேட்பது புரிகிறது. நீங்கள் நுட்பமாக கவனித்துப் பார்த்தால், நாம் தீமையாக, நம்மைக் கஷ்டப்படுத்துகின்ற ஒன்றுகூட, மிகப்பெரிய நன்மையை பின்னால் செய்வதற்கு ஒரு நுழைவு வாயிலாக இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. இதற்கு ஆன்மீகத்தில் ஒரு சான்று காட்டுகின்றேன்.

கஜேந்திரன் என்கின்ற யானை முதலை வாயில் அகப்பட்டு மரணப் போராட்டம் நடத்துகின்ற துயரத்தை தொண்டரடிப்பொடி ஆழ்வார் ‘‘யானையின் அருந்துயர்’’ (அருமையான கஷ்டம்) என்று சொல்லுகின்றார். இதற்கு உரை எழுதிய ஆச்சாரியர்கள் விளக்கம் சொன்னார்கள். மற்ற துயரங்கள் எல்லாம் இறைவன் நேர்க்காட்சி தராத அருளால் நீங்கிவிடும். ஆனால், வைகுண்டத்திலிருந்து கிளப்பி, அவசரம் அவசரமாக ஓடி வரச்செய்து, கஜேந்திரன் என்ற யானைக்கு நேரடிக் காட்சி கொடுக்கத் தூண்டிய துன்பம் என்பதால், ‘‘அருமையான துன்பம்’’ என்றார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் பலாபலன்களை அவ்வளவு எளிதாக நிர்ணயித்து விட முடியாது. ஆயினும் சாத்திர அடிப்படையில் நமக்கு இந்த காலம் நன்மையான காலமாக இருக்கும் அல்லது கொஞ்சம் கடுமையான காலமாக இருக்கும் என்பதை ஓரளவு தெரிந்து கொண்டு முன்னேற்பாடுகளுடன் இருப்பதற்கு உதவும். இதைத் தவிர வெறும் ராசி பலன்களால் ஒருவர் பலன்களை நிச்சயமாக நிர்ணயித்துவிட முடியாது.

கிரகப்பெயர்ச்சியை ஏன் கொண்டாடு கிறோம்?

கோயில்களில் குரு பெயர்ச்சியை, சனிப் பெயர்ச்சியை அல்லது ராகு – கேது பெயர்ச்சிகளை மிக முக்கியமாக கொண்டாடுவதற்குக் காரணம் உண்டு. சனி, ராகு, குரு ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசி மாறுவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளக்கூடிய கோள்கள் என்பதால், கொண்டாடுகிறார்கள். மற்றபடி ஒருவருடைய பலாபலன்களை நிர்ணயிப்பது நவகிரகங்களே. இன்னும் சொல்லப் போனால் ஒரு நாளின் நன்மை தீமைகளை தீர்மானிப்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒருதரம் மாறக் கூடிய லக்கினங்களும், ஆறு மணி நேரத்திற்கு ஒரு தரம் நட்சத்திர பாதங்களை மாறி மாறி பயணிக்கும் சந்திரனும்தான்.

கோயில்களில் இந்த ராகு, சனி, குரு பெயர்ச்சி வைபவங்களைக் கொண்டாடுவதற்கு காரணம், உலகம் நல்ல விதமாக இருக்க வேண்டும் என்கின்ற லோக உபகாரம்தான். குருபகவான் சாஸ்திர ரீதியாக சில ராசிகளுக்கு சகாயம் செய்கின்ற நிலையில் இருப்பார். சில ராசிகளுக்கு அவர் எதிர்மறை பலன்களைத் தரக்கூடிய அல்லது பலனே தர முடியாத நிலையில் இருப்பார்.

அதிக பலன் பெறக்கூடிய ராசி நேயர்களும், மிதமான பலன்களை பெறக்கூடிய ராசி நேயர்களும், பலன் எதிர்பார்க்க முடியாத ராசி நேயர்களும், நன்மைகள் பெருகவும், தீமைகளை குறைத்துக் கொள்ளவும், வழிபாடு நடத்த வேண்டும் என்பதற்காகவே அன்றைய தினம் நவக்கிரக ஹோமங்களும், குறிப்பாக அந்த குறிப்பிட்ட கிரகத்தை குறித்த காயத்ரி மந்திரங்களால், களால் கிரகதோஷ பரிகார ஹோமங்களும் நடைபெறுகின்றன. திருக்கோயில்களில் விசேஷ அபிஷேக வைபவங்களும் அர்ச்சனை முதலிய வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இப்பொழுது இந்த குரு பெயர்ச்சியை பற்றி சிந்திப்போம்.

பொதுவாக மிதுன ராசிக்கு 11-ஆம் இடத்திலும், சிம்ம ராசிக்கு 9-ஆம் இடத்திலும், துலா ராசிக்கு 7-ஆம் இடத்திலும், மீன ராசிக்கு 2-ஆம் இடத்திலும் குரு பிரவேசிக்கிறார் என்பதால், அவர் இந்த ராத்திரி நேயர்களுக்கு நலம் தரும் நிலையில் இருக்கிறார் என்பது பொதுவான பலன்.

நன்மை தீமை சுழற்சியைப் புரிந்து கொள்ளுங்கள்

இதில் ஒரு விஷயத்தை நாம் மிக நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கும் எந்த காலமும் முழுமையாக நலம் தருவதாகவோ, எந்த காலமும் முழுமையாக தீமை தருவதாகவோ எந்த ஜாதகமும், கிரக பெயர்ச்சிகளும் அமைவது இல்லை. கவியரசு கண்ணதாசன் ஒரு பாடலிலே மிக அற்புதமாகச் சொல்லுவார்.

வாழ்வென்றும் தாழ்வென்றும்
வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது – அதில்தான்
சரித்திரம் நிகழ்கின்றது;
யாருக்கும் வாழ்வுண்டு
அதற்கொரு நாளுண்டு
அது வரை பொறுப்பாயடா – மகனே என்
அருகினில் இருப்பாயடா

மிதுன ராசி நேயர்கள், கடந்த சில வருடங்களாக படாத அவஸ்தைப் பட்டு இருப்பார்கள். என்னிடமே பல மிதுன ராசி நேயர்கள் சொன்னது உண்டு. சிலருக்கு வேலை போயிருக்கும். சிலருக்கு வருமானம் போயிருக்கும். சிலருக்கு பழிச்சொல் வந்து சேர்ந்திருக்கும். சிலருக்கு குடும்ப பிரச்னைகள் வந்திருக்கும். சில தம்பதிகள் பிரிந்து போய் இருப்பார்கள். சில பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசெலவில் அதிக பணத்தை இழந்திருப்பார்கள். சில பேர் மன நிம்மதி இல்லாமல் துடித்திருப்பார்கள். இவ்வளவும் நடந்தது மிதுன ராசி நேயர்களுக்கு.

இருட்டான காலம். காரணம், 10-ஆம் இடத்தில் குரு. அவர் ஒரு இடத்தில் இருக்க வைக்க மாட்டார். அஷ்டமத்தில் சனி. சில திருமணங்கள் நிச்சயதார்த்தம் அளவுக்கு சென்றுகூட நின்று போனதை பார்த்திருக்கின்றேன். எல்லா மிதுன ராசி நேயர்களுக்கும் இப்படி நடந்து இருக்குமா என்றால் நடந்திருக்காது. ஜனன கால ஜாதக பலனும், தசாபுத்திகளும் இறுக்கமாக இருந்தால், இந்த அஷ்டம சனியும், 10-ல் குருவும் படாதனப்படுத்தி இருப்பார்கள்.

அஷ்டமசனியின் கஷ்டங்கள் குறைந்திருக்கும்

அப்படிக் கஷ்டப்பட்ட மிதுன ராசி நேயர்கள், இப்பொழுது இரண்டு வகையான நன்மை தரும் கோசார நடையை சந்திக்கின்றார்கள். முதலாவதாக, 10-ல் இருந்த குரு லாப ராசியான பதினொன்றாம் இடத்துக்கு வருகின்றார். மகர சனி விலகி பாக்கிய ஸ்தானத்திற்கு சென்றதால், அஷ்டமச்சனியின் கஷ்டங்கள் எல்லாம் குறைந்திருக்கும். மிதுனராசி நேயர்களுக்கு, ஜென்ம ஜாதகம் மோசமாக இருந்தாலும்கூட இந்த கோசாரமானது ஓரளவுக்கு ஆறுதல் தரும் என்பதால் அதை பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால், தங்களுடைய கஷ்டங்களை சமாளித்துக் கொள்ளலாம்.

எந்த ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக கஷ்டங்களைச் சந்தித்தவர்களுக்கு இந்த கோச்சாரமானது ஒரு பலத்தைத் (சக்தியை) தந்திருக்கிறது. அந்த பலத்தை மனரீதியாக வளர்த்துக் கொண்டு நன்மைகளைப் பெருக்கிக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் மிதுன ராசிக்காரர்களுக்கு குரு சனிப்பெயர்ச்சி நல்லது என்று மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மிதுன ராசிக்காரர்களுக்கு, பொன்னும், மணியும், வைரமும் வீட்டு வாசலில் வந்து கொட்டிவிடும் என்று சொன்னால் அதை நம்பி விடாதீர்கள்.

சிம்ம ராசி நேயர்களுக்கு

அதைப்போலவே சிம்ம ராசி நேயர்களுக்கு 9-ஆம் இடத்துக்கு குரு பெயர்ச்சி நடந்திருக்கிறது. என்னதான் சிம்ம ராசி சூரியனுக்கு குரு நண்பராக இருந்தாலும்கூட, அவர் அஷ்டமத்தில் இருக்கும் பொழுது, விதிப்படி சில கஷ்டங்களைத் தந்து தானே ஆக வேண்டும். அதே நேரத்தில், இப்பொழுது கண்டச் சனியும் கும்பத்திலிருந்து சிம்ம ராசியைப் பார்ப்பதால், அவர்களுக்கு சிரமம் உண்டு.

இந்த சூழலில் மேஷத்தில் உள்ள குரு 5-ஆம் பார்வையாக சிம்ம ராசியைப் பார்க்கின்றார். சுப கிரகங்களின் “திரிகோண பலம்” (1,5,9) என்பது மிக அற்புதமானது. சிம்மத்துக்கு 9-ஆல் குரு இருப்பதால், ஸ்தான பலம் அடைகின்றார். மேஷத்தில் இருந்து 5-ஆம் பார்வையாகச் சிம்மத்தை பார்ப்பதால், பார்வை பலமும் கிடைக்கின்றது. ஆகையினால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இது ஓரளவு பரவாயில்லை என்று சொல்லலாம்.

துலா ராசிக்காரர்களுக்கு

துலா ராசிக்காரர்களும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருந்தது. 6-ல் குரு மறைந்து விரய ஸ்தானத்தைப் பார்த்து பல அவஸ்தைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். இப்பொழுது அந்த நிலை, துலா ராசிக்காரர்களுக்கு மாறிவிட்டது. சற்று ஆரோக்கியம் கிடைத்திருக்கிறது. மீன ராசி நேயர்களுக்கு அது சொந்த இடம் என்றாலும்கூட, ஜென்மக்குரு அல்லவா. தன் கையே தன் கண்ணை சுட்டுக் கொள்வது போல, சில காரியங்களை செய்திருப்பார்கள். குரு இப்பொழுது தன குடும்ப ஸ்தானத்துக்கு மாறியதால் ஒரு சிறப்பு.

மற்ற ராசி நேயர்களுக்கு கஷ்டம் தானா?

அப்படியானால் மற்ற ராசி நேயர்களுக்கு எல்லாம் கஷ்டம் தானா என்று சொன்னால் நிச்சயமாக கஷ்டம் இல்லை. உலகத்தில் அமெரிக்காவில் சுகமான சீதோஷ்ண நிலை நிலவுகின்ற பொழுது, இந்தியாவில் வேறு விதமான ஒரு நிலை நிலவும். ஒரு இடத்தில் அதிகமாக வெயில் காயும். ஒரு இடத்தில் புயல் வீசும்.
இன்னொரு இடத்தில் மழை அதிகமாக பெய்து கொண்டிருக்கும். அந்தந்த நாடுகளும் அவற்றிலிருந்து எதிர்கொள்ளவும், கஷ்டங்களை தீர்த்துக் கொள்ளவும் சில ஏற்பாடுகளை செய்து கொள்வது போல, எதிர்மறை பலன்களையோ, இல்லை, பலம் இல்லாத நிலையையோ, எதிர்பார்க்கக் கூடிய ராசி நேயர்கள், குரு பெயர்ச்சியால் பாதிக்காமல் இருக்க தங்களை ஓரளவு மனரீதியாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கிரக பெயர்ச்சி பலன்களைப் பார்த்து மனதை தளரவிடாமல் இருக்க வேண்டும். அதே சமயம் நல்ல பலன்கள் எல்லாம் வீட்டில் வந்து கொட்டும் என்ற நினைவிலும் இருக்காமல், பகவானை சரணடைவதன் மூலமாக, நமக்குரிய நல்ல பலன்களை நாம் மேம்படுத்திக் கொள்ளலாம். தீய பலன்களைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது தாங்கும் படியான மனநிலையைப் பெறலாம்.

குரு பெயர்ச்சி என்ன செய்யும்?

இப்பொழுது வேறு ஒரு விஷயத்தை நம்முடைய நேயர்களோடு நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலில் குரு பெயர்ச்சி என்ன செய்யும்? நீங்கள் மிதுன ராசியாகவே இருந்தாலும்கூட உங்களுக்கு குரு பதினொன்றாம் இடத்தில் வந்து எந்த லாபத்தையும் தரவில்லையே என்று நினைக்காமல் இருக்க நீங்கள் முதலில் குருவை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு விதமான காரகத்துவத்தை எதிரொலிப்பவை என்பது ஜோதிட நூல்களின் அடிப்படை விதி. அதனால்தான் கிரகங்களை பஞ்சபூத அடிப்படையில் கொடுத்திருக்கிறார்கள்.

நம்முடைய உடம்பும் பஞ்சபூத அடிப்படையில்தான் இருக்கிறது. இந்த அண்டாதி அண்டமும் பஞ்சபூத அடிப்படையில்தான் இருக்கின்றன. அப்படி இருக்கின்ற பொழுது ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒரு விதமான குண நலன்கள், செயல்கள், விளைவுகள் இருக்கவே செய்கின்றன. இதனைத்தான் ஜோதிட சாஸ்திரத்தில் காரகத்துவம் என்பார்கள். இந்த காரகத்துவம் என்பது அகம் சார்ந்த காரகத்துவம், புறம் சார்ந்த காரகத்துவம் என்று இரண்டு வகையில் சொல்லலாம். அகம் சார்ந்த காரகத்துவம் என்பது நம்முடைய உறவுகள், மன நிலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

புறம் சார்ந்த காரகத்துவம் என்பது நம்முடைய வீடு, வாசல், உத்தியோகம், பணம் முதலியவற்றைச் சொல்லலாம். அந்த அடிப்படையில் குருபகவான் உங்களுக்கு நல்லது செய்வார், அல்லது செய்யவில்லை என்பதை நீங்கள் எப்படி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? அதை வெறும் ராசி பலனைப் பார்த்து மட்டும் முடிவு எடுக்காதீர்கள்.

இந்த விஷயங்கள் போதும்

குரு எதிர்மறையாய் வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இந்த விஷயங்கள் போதும்.

  1. சில பேர் ஆசிரியர்கள், குருமார்கள், பெரியோர்களிடம் மரியாதை இல்லாமல் இயல்பாகவே நடந்து கொள்வார்கள். ஆசிரியரை மதிக்க மாட்டார்கள். இன்னும் சில பேர் ஆசிரியர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் உண்டு. பெரியோர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் உண்டு.
    இது இயல்பிலேயே இருந்தால் அடிப்படை ஜாதகத்திலே குருவலுவாக இல்லை கெட்டுவிட்டது என்று பொருள். நேற்று வரை நன்றாக மரியாதை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று மரியாதையை கொடுக்காமல் இருந்தால் தற்காலிகமாக (கோசார தசா புத்தி அடைப்படையில்) குரு கெட்டிருக்கிறது என்று பொருள்.
  2. இயல்பிலேயே நல்ல அறிவுக்கூர்மை இருந்தாலும்கூட மிக மோசமான நச்சு எண்ணங்களும், காம எண்ணங்களும், பொறாமை எண்ணங்களும், தீய எண்ணங்களும், வக்கிர புத்தியும் இருந்தால், குரு கெட்டுவிட்டது என்று பொருள். அல்லது குரு செயல்படாமல் இருக்கிறது என்று பொருள். இதுவும் இயல்பிலேயே இருக்கலாம் அல்லது நேற்று வரை உத்தமமாக இருந்தவர்கள் திடீரென்று சபலத்தினாலே ஏதேனும் தவறு செய்து மாட்டிக் கொண்டு முழிக்கலாம். அவமானம் சந்திக்கலாம். அப்படி இருந்தால் குரு கெட்டுவிட்டது என்று பொருள். உதாரணமாக குரு பலகீனமாக இருந்து, சனி, ராகு போன்ற தீய கோள்களால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், புத்திசாலித்தனம் இருந்தும் வக்கிர சிந்தனை இருக்கும்.
  3. பொது பணத்தை (public money) தவறாகக் கையாளுவார்கள். கணக்கு வழக்குகளில் மாட்டிக் கொண்டு முழிப்பவர்களும் உண்டு. அந்த பணத்தை எடுத்து தவறான செலவுகள் செய்திருப்பார்கள். அவர்களுக்கு நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ குரு கெட்டுவிட்டது என்று பொருள். கோயில் விழாக்கள் எதற்கும் செல்ல மாட்டார்கள். அதில் ஆர்வம் குறைந்து போய் இருக்கும். ‘‘ஆமாம் பெரிய கோயில், எவ்வளவோ பார்த்தாகிவிட்டது’’ என்று இடக்கு மடக்காகப் பேசுவார்கள்.
  4. உடம்பில் தேவையில்லாத சதை, எடை, கொழுப்புச்சத்து கூடியிருக்கும். கட்டுப்படுத்த முடியாது. இப்படி எல்லாம் இருந்தால் குரு கெட்டுவிட்டது.
  5. இன்னும் சில பேர் நன்றாக தெரிந்தும் தவறான யோசனை சொல்லி (wrong Guidance) வழி நடத்துவார்கள். அவர்களுக்கும் குரு கெட்டுவிட்டது என்று பொருள்.
  6. அதைப்போலவே ஒரு குறிப்பிட்ட ராசிக்கு குரு எந்த இடத்தில் இருக்கிறாரோ, அந்த இடத்து வேலையைச் செய்யாமல் அல்லது சரியாகச் செய்யவில்லை என்று சொன்னால், குரு உங்களுக்கு அந்த குறிப்பிட்ட காரகத்தைச் செய்ய ஒத்துழைக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
    உதாரணமாக கடக ராசிக்காரர்களுக்கு இப்பொழுது குரு 10-ல் போகிறார். பதவி குறைப்பு, இடமாற்றம், தொழிலில் சிக்கல், வியாபாரம் சரியாக போகாமல் இருப்பது, கௌரவம் குறைவது, போன்றவற்றையெல்லாம் சந்தித்தால் குரு அவர்களுக்குச் சரியாக செயல்படவில்லை என்பதை ராசி பலனைப் பார்க்காமலேயே புரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே, இப்போது குரு முழு வலிமையுடன் (full strength) இல்லை.

காரணம், ராகு அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கிறார். அதே நட்சத்திரத்தில்தான் குருவும் நுழையப் போகிறார். ராகு குருவை நோக்கி வர (anti clockwise) குரு ராகுவை நோக்கி போக(clockwise) 12 பாகைகள் இடைவெளி. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடக்கும் வரை, குரு பலவீனமாகத்தான் இருப்பார். அது மட்டும் இல்லாமல், சனியின் மூன்றாவது பார்வை மேஷ ராசியில் விழுகிறது. சனியால் குருவின் சுபத்துவம் இன்னும் கொஞ்சம் குறையும்.

என்ன செய்ய வேண்டும்? (Remedies)

  1. இப்படிப்பட்டவர்கள் இந்தச் சிக்கலைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.
  2. வக்கிரமான எண்ணங்கள் ஏற்படும் பொழுது, நாம் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
  3. கோயிலுக்கு செல்ல வேண்டும். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
  4. முதலில் பெரியோர்களை வணங்கி ஆசீர்வாதம் பெற வேண்டும். பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதும், வாழ்த்து பெறுவதும் குருவால் ஏற்படக்கூடிய தீமைகளைக் குறைத்து நன்மையை அதிகரிக்கச் செய்யும்.
  5. அதைப் போலவே ஹோமங்கள், வேள்விகள், மந்திரங்கள், கோயில் வழி பாடுகள் போன்றவற்றை எல்லாம் இயன்ற அளவு கலந்து கொள்வது, குருவின் பரிபூரண ஆசியைப் பெற்றுதரும்.
  6. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற பழமொழி இருக்கின்றது. இதில் முதல் குரு நம்மைப் பெற்ற தாயார், இரண்டாவது குரு நம்மைப் பெற்ற தந்தை, மூன்றாவது குரு நமக்கு பாடம் சொல்லித் தந்த ஆசிரியர் அல்லது மெய்யறிவு தந்த ஆசாரியர். நான்காவது குரு தெய்வம். இந்த நான்கு பேரையும் நாம் தினசரி நினைத்துக் கொண்டு அவர்களுக்கு உரிய வணக்கங்களைச் செலுத்துவதன் மூலமாக குருவினுடைய பரிபூரண அருளைப் பெறலாம்.
  7. மகான்கள் என்று சொல்லப்படுகின்ற பலர் உள்ளனர். ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், குரு ராகவேந்திரர் போன்று நீங்கள் நினைக்கின்ற மகான்களினுடைய அதிஷ்டானத்திற்கோ, பிருந்தாவனத்திற்கோ சென்று அங்கு தியானம் செய்வதன் மூலமாக குருவின் பரிபூரண அருளைப் பெறலாம்.
  8. பொதுவாக குருவுக்கு 100% சுபத்துவம் உண்டு. அதனால்தான் இன்னொரு சுப கிரகமான சுக்கிரனைவிட குருவை ஒரு படி மேலே வைத்தார்கள். சுக்கிரன் பார்த்தால் கோடி நன்மை என்று சொல்லவில்லை, குரு பார்த்தால்தான் கோடி நன்மை என்று சொன்னார்கள்.

எனவே நம்முடைய பூஜை அறை, மனம், ஆடைகள், எண்ணங்கள், வார்த்தைகள், சாப்பிடுகின்ற உணவு இவை அத்தனையிலும் நாம் தூய்மையைக் கடைப்பிடிப்பதன் மூலமாக குருவினுடைய பரிபூரண அருளைப் பெறலாம்.

இந்த அருளைப் பெற்றுவிட்டால், நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு வருகின்ற நன்மைகள் பெருகும். தீமைகள் குறையும். இனி நீங்கள் ராசி பலன்களைப் பார்க்க வேண்டிய அவசியம்கூட இருக்காது. என்னென்ன சுப பலன்களோ, அவைகள் உங்கள் ராசிக்கு வந்து நிற்கும்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post குரு பெயர்ச்சியை எதிர்கொள்வது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Guru Pairchi ,Thirukanitha ,Vakya Panchangat ,Dinakaran ,
× RELATED வித்தியாசமான வழிபாடுகள்